அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூ.2½ லட்சம் நகை, பணம் கொள்ளை

நடுவீரப்பட்டு அருகே அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-07-26 19:56 GMT

நெல்லிக்குப்பம், 

அ.தி.மு.க. பிரமுகர்

நடுவீரப்பட்டு அருகே உள்ள பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(வயது 48). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர் அ.தி.மு.க. பிரமுகராக இருந்து வருகிறார். இவரது மனைவி சுதா பாலூர் சன்னியாசிப் பேட்டை ஊராட்சியில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களின் பிள்ளைகள் நெய்வேலியில் தனியார் பள்ளியில் தங்கி படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டை பூட்டி விட்டு சரவணனும், அவரது மனைவியும் நெய்வேலியில் உள்ள தங்களின் பிள்ளைகளை பார்த்து வர சென்றனர். பின்னர் அங்கிருந்து இருவரும் புறப்பட்டு நேற்று காலையில் வீட்டுக்கு வந்தனர்.

நகை, பணம் கொள்ளை

அப்போது வீட்டின் முன்பக்க இரும்பு கேட் மூடி இருந்த நிலையில் வாசல் கதவுகள் திறந்து இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இருவரும் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் அங்காங்கே சிதறிக் கிடந்தன.

வீட்டின் அறைக்குள் சென்று பார்த்தபோது அலமாாியின் கதவுகள் திறந்து கிடந்தன. அதில் இருந்த 3¼ பவுன் நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் கார் கதவை உடைத்து திருட முயற்சி செய்துள்ளதும் தொியவந்துள்ளது.

வலைவீச்சு

இதுபற்றிய தகவல் அறிந்து நடுவீரப்பட்டு போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் தடயங்களை சேகரித்து சென்றனர்.

இ்ந்த கொள்ளை சம்பவம் குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் நடுவீரப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்