அ.தி.மு.க. அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகியது
அ.தி.மு.க. அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகியது என்று எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.
அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி
தமிழ்நாடு தொழிற்சங்க உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி சேலம் இரும்பாலை சாலையில் ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாசலம் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு தலைவர் கதிர்வேல் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். விழாவில் அவர் கூறியதாவது:-
கட்டுமான பொருட்கள்
தொழிலாளர்கள் அ.தி.மு.க.வில் இணைவதில் பெருமை அடைகிறேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கட்டுமானப்பொருட்கள், அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆட்சிக்கு வந்ததும் கம்பி, மணல், எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் அனைத்து விலையும் உயர்ந்து உள்ளது. இதை தி.மு.க. அரசு கண்டு கொள்ளவில்லை. இதனால் பெரும்பாலான இடங்களில் கட்டுமான பணி நடைபெறாமல் பல்வேறு கட்டிடங்கள் பாதியில் நிற்கின்றன. இதனால் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர் குடும்பம் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
இதேபோல் முதியோர் உதவித்தொகைவும் ஏராளமானவர்களுக்கு கிடைக்கவில்லை. அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி விடுவதுடன் மக்கள் விரோத அரசாக மாறி வருகிறது. எனவே நிறுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் முதியோர் உதவித்தொகை வழங்க வேண்டும். அதே போன்று கட்டுமான பொருட்களின் விலையை குறைத்து தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்க வேண்டும். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும் போது கட்டுமான தொழிலாளர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படும்.
வேலைவாய்ப்பு
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2019-ம் ஆண்டு ரூ.5 லட்சத்து 5 ஆயிரம் கோடி வெளிநாட்டு முதலீடு ஈர்க்கப்பட்டு 304 தொழில் புரிந்துணர்வு போடப்பட்டு நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டது. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் 250 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன.
அதில் அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் சொல்வது ஒன்று. தற்போது செய்வது ஒன்று. இதுதான் தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சி. ஜெயலலிதா பெயரில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது.
இட ஒதுக்கீடு
அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத நிலை இருந்து வந்தது. எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தது. அதனால்தான் இன்று ஏராளமான கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகி உள்ளது. கூலி வேலை செய்யும் தொழிலாளியின் குழந்தைகள் கூட டாக்டர்களாகி வருகின்றனர் என்றால் அதற்கு காரணம் அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீடுதான். எனவே அனைவரும் அ.தி.மு.க.வுக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
விழாவில் பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட பொருளாளர் பங்க் எஸ்.வெங்கடாசலம், அவைத்தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஜான்கென்னடி, வர்த்தக அணி செயலாளர் ராம்ராஜ், பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி, பாண்டியன், பாலு, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.