மாவட்டத்தில் வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை

Update: 2023-03-22 19:30 GMT

சேலம் மாவட்டத்தில் வனப்பரப்பை 33 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.

உலக வனங்கள் தினம்

சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுகாவுக்கு உட்பட்ட கொளகூர் அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக வன நாள் விழா நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

1988-ம் வருடத்திய வன கொள்கையின்படி நாட்டின் நிலப் பரப்பில் 33 சதவீதம் வனம் மற்றும் பசுமை போர்வையின் கீழ் கொண்டு வரப்படுவதை இலக்காக கொண்டுள்ளது. 2021-ம் ஆண்டு கணக்கீட்டின் படி நமது நாடு அதன் நிலப்பரப்பில் 21.71 சதவீதம் அதாவது 7 லட்சத்து 13 ஆயிரத்து 789 சதுர கிலோ மீட்டர் வனப்பரப்பை கொண்டுள்ளது. தமிழ்நாடு அதன் நிலப்பரப்பில் 20.31 சதவீதம் அதாவது 26 ஆயிரத்து 419 சதுர கிலோ மீட்டர் வனப்பரப்பை கொண்டுள்ளது. 2019-ம் ஆண்டு கணக்கெடுப்பை விட 0.21 சதவீதம் வனப் பரப்பு தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது.

அடர்த்தியான காடுகள்

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 2021-ம் ஆண்டு கணக்கீட்டின் படி மிக அடர்த்தியான காடுகள் 197.62 சதுர கிலோ மீட்டர், மித அடர்த்தியான காடுகள் 757.20 சதுர கிலோ மீட்டர் மற்றும் திறந்த வெளி காடுகள் 516.30 சதுர கிலோ மீட்டர் ஆகியவற்றை உள்ளடக்கிய 1,471.12 சதுர கிலோ மீட்டர் அதாவது மாவட்ட நிலப்பரப்பில் 28.9 சதவீதம் வனப்பரப்பை கொண்டுள்ளது. அடுத்த 10 வருடத்தில் சேலம் மாவட்ட வன நிலப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சேலம் மாவட்ட வனப் பகுதிகளில் யானை, காட்டு மாடு, புள்ளி மான், சருகு மான் உள்ளிட்ட பாலூட்டி இனங்களும், செந்தலை கிளி, நீல முக செண்பகம், சோலை பாடி, மாங்குயில், செம்மீசை சின்னான், ஊதா தேன் சிட்டு உள்ளிட்ட பறவையினங்களும், பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகளும், மலைப் பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன் உள்ளிட்ட பாம்பு வகைகளும் பல்வேறு வகையான பூச்சிகளும் காணப்படுகின்றன.

கண்காணிக்கப்படுகிறது

உலகில் வேறு எங்கும் காண முடியாத பாறை எலி போன்ற ஓரிட வாழ் விலங்கினங்களும், ஓரிட வாழ் தாவரமும் காணப்படுவது சேலம் மாவட்ட வனப் பகுதிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாக உள்ளது. வன தீயினை கட்டுப்படுத்த குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங்க் ரவி, வனவியல் விரிவாக்க அலுவலர் கண்ணன், குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா இணை இயக்குனர் செல்வகுமார், பாறை எலி ஆராய்ச்சியாளர் பிரவின்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்