தெரு விளக்குகளை எல்.இ.டி.யாக மாற்ற நடவடிக்கை
இளையான்குடி நகர் பகுதியில் தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்கு களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இளையான்குடி
இளையான்குடி நகர் பகுதியில் தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்கு களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரூராட்சி கூட்டம்
இளையான்குடி பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி தலைவர் நஜுமுதீன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு செயல் அலுவலர் கோபிநாத், துணைத் தலைவர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மன்ற உறுப்பினர் நாகூர் மீரா, நகரில் கழிவுநீர் வாய்க்கால்கள் சேதம் அடைந்து பராமரிப்பின்றி இருப்பதால் பல இடங்களில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுத்துகிறது என்றார்.
உறுப்பினர் அல் அமீன், சமுத்திர ஊருணியை சுற்றிலும் கட்டிட கழிவுகள் கால்நடைகளின் கழிவுகள் மழை நீரால் ஊருணி அசுத்தமடைகிறது. கால்நடை வளர்ப்போர் ஊருணியின் கரைகளில் கால்நடைகளை கட்டுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
போர்வெல்
உறுப்பினர் செய்யது ஜமீமா, முன்னுரிமை அடிப்படையில் குடிதண்ணீர் வசதியை மேம்படுத்திட போர்வெல் கிணறுகள் அமைத்து சின்டெக்ஸ் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்.
மன்ற உறுப்பினர் கிருஷ்ணவேணி, காலை உணவு திட்ட சமையலறைகள் வாடகை கட்டிடத்திலும், சேதமடைந்தும் இருப்பதால் கட்டிடத்தை பராமரிக்கவும், புதிய சமையலறை கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்.
மன்ற உறுப்பினர் ராஜவேலு, பேரூராட்சி அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கார், தந்தை பெரியார், காயிதே மில்லத் ஆகியோரின் படங்கள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தீர்மானம்
மேலும் நகரின் தற்போதுள்ள மின் விளக்கினை மாற்றி எல்.இ.டி விளக்குகளாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் செயல் அலுவலர் கோபிநாத் நன்றி கூறினார்.