தரமற்ற மின்சாதனங்களை விற்றால் கடும் நடவடிக்கை
ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத தரமற்ற மின் சாதனங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சாருஸ்ரீ கூறியுள்ளார்.
திருவாரூர்;
ஐ.எஸ்.ஐ. முத்திரை இல்லாத தரமற்ற மின் சாதனங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சாருஸ்ரீ கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தரச்சான்று
மத்திய அரசு மின் சாதனங்கள் தரக்கட்டுபாட்டு ஆணைப்படி மத்திய அரசின் தரச்சான்று இல்லாமல் தயாரிக்கப்படும், விற்பனை செய்யப்படும் தரம் குறைந்த மின் சாதன பொருட்களை பயன்படுத்தும் போது மக்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. எனவே தரமற்ற மின்சாதன பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய மாவட்ட தொழில் மைய பொதுமேலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உற்பத்தி மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும்.
ஆய்வு
திருவாருர் மாவட்டம் முழுவதும் உள்ள ஐ.எஸ்.ஐ. தரச்சான்று இல்லாத வாட்டர் ஹீட்டர், மின் சலவைப்பெட்டி, மின்சார அடுப்பு, மின் சுவிட்ச், எலக்ட்ரிக் ரேடியேட்டர்ஸ், சர்க்யூட் பிரேக்கர்ஸ், பல்புகள், பி.வி.சி. கேபிள்கள் மற்றும் வீட்டு உபயோக மின் சாதனங்கள் தயாரிப்பதையும் அல்லது விற்பனை செய்வதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்தரம் குறைந்த பொருட்கள் தயாரிப்பதும் விற்பனை செய்வதும் உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருவாருர் மாவட்டம் முமுவதும் உள்ள மின் சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோக மின் சாதன பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் எந்தவித முன்னறிவிப்பு இன்றி மாவட்ட தொழில் மைய அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும்.
தரக் கட்டுபாட்டு முத்திரை
ஆய்வின்போது உற்பத்தி மற்றும் விற்பனையாளர்களிடம் இருந்து மாதிரிகளை சேகரிக்கவும், சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்விற்கு அனுப்பவும் நிர்ணயிக்கப்பட்ட தர ஆய்வின்படி இல்லாத மின் சாதன பொருட்களை பறிமுதல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் வீட்டு உபயோகமின் சாதனபொருட்கள் உற்பத்தியாளர்களுக்கான தற்காலிக மற்றும் நிரந்தர பதிவுகள் மேற்கொள்ள மாவட்ட தொழில் மைய பொதுமேலாளரை அணுக வேண்டும். எனவே உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் இந்திய தரக் கட்டுபாட்டு முத்திரை (ஐ.எஸ்.ஐ.) பெற்ற மின்சாதன பொருட்களை மட்டுமே உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.