மாவட்டம் முழுவதும் வீடுதோறும் தேசியகொடி வழங்கும் பணி தீவிரம்

தேனி மாவட்டம் முழுவதும் வீடுதோறும் தேசிய கொடி வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-08-12 16:20 GMT

தேசிய கொடி வழங்கிய கலெக்டர்

75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவையொட்டி அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) வரை தேசியகொடியை ஏற்ற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் அனைத்து வீடு, அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் தேசியகொடி ஏற்றுவதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, கம்பம் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் வீடு, வீடாக சென்று மக்களுக்கு தேசிய கொடியை வழங்கினார். அப்போது வீடுகளில் தேசியகொடி ஏற்ற வேண்டும் என்று கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தேசிய கொடி

பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி செல்வராஜ் தலைமையில் வீடு வீடாக சென்று இலவசமாக தேசிய கொடி வழங்கும் பணி நடைபெற்றது. மேலும் அரசு அலுவலகங்களிலும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராணி, துணைத் தலைவர் ராஜசேகர், ஊராட்சி செயலாளர் ஜெயபாண்டியன், முக்கிய பிரமுகர்கள் துரைப்பாண்டி, குணா, ராேஜஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் வீடுகள் தோறும் தேசிய கொடி வழங்கும் பணியை பேரூராட்சி தலைவர் சந்திரகலா தொடங்கி வைத்தார். மேலும் 18 வார்டுகளிலும் அந்தந்த பகுதி கவுன்சிலர்கள் ஒவ்வொரு வீடாக சென்று பேரூராட்சி பணியாளர்கள் மூலம் தேசிய கொடிகளை வழங்கினர்.

போலீஸ் துறை

அதுபோல், போலீஸ் துறை சார்பில் தேசியகொடி மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டது. அவற்றை போலீஸ் இன்ஸ்பெக்டர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே வழங்கினார். பின்னர் அந்த கொடிகளை போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கு அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் வினியோகம் செய்தனர்.

மேலும் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பு மற்றும் மாவட்டத்தில் உள்ள போலீஸ் குடியிருப்புகளிலும் தேசிய கொடி வினியோகம் செய்யப்பட்டது.

செல்பி பதிவேற்றம்

அதேநேரத்தில் "தேனி மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருத்துவமனைகள் என அனைத்து தரப்பினரும் இன்று முதல் நாளை மறுநாள் வரை தேசியகொடி ஏற்றி வைக்க வேண்டும்.

பணியாளர்களும் தேசிய கொடி அணிந்து பணியாற்ற வேண்டும். வாடிக்கையாளர்களுக்கும் வினியோகம் செய்ய வேண்டும். மேலும், தேசிய கொடி முன்பு நின்று செல்பி எடுத்து அந்த புகைப்படத்தை http://amritmahotsava.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்" என்று தேனி தொழிலாளர் உதவி ஆணையர் சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்