பூந்தமல்லி அருகே நடிகர் விஷால் படப்பிடிப்பு தளத்தில் விபத்து - சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

பூந்தமல்லி அருகே நடிகர் விஷால் படப்பிடிப்பு தளத்தில் திடீர் விபத்து ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.;

Update:2023-02-23 12:18 IST

நடிகர் விஷால் தற்போது 'மார்க் ஆண்டனி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் அரங்கம் அமைத்து நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட அரங்கத்தில் ஏராளமான கலைஞர்கள் பங்கேற்ற சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அங்குள்ள சுவரை இடித்துக்கொண்டு வாகனம் ஒன்று கூட்டத்துக்குள் புகுந்து வருவதுபோன்ற காட்சி படமாக்கப்பட்டது.

அப்போது பின்பகுதியில் வெடி வெடிக்க புைக மண்டலத்துக்கு நடுவில் வித்தியாசமான வாகனம் ஒன்று கூட்டத்தை நோக்கி வேகமாக வந்தது. ஆனால் பாதியில் நிற்க வேண்டிய அந்த வாகனம் தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்ற கலைஞர்கள் மீது மோதுவதுபோல் வேகமாக வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்த தொழில்நுட்ப கலைஞர்கள், துணை நடிகர்கள், நடிகைகள் மற்றும் படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த சுமார் 50-க்கும் மேற்ப்பட்ட ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். அந்த வாகனம் வேகமாக வந்து உள்ளே அமைக்கப்பட்டு இருந்த செட்டின் மீது மோதி நின்றது.

நல்லவேளையாக இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, எந்தவித உயிர் சேதமோ ஏற்படவில்லை. படப்பிடிப்பில் நடந்த இந்த திடீர் விபத்து குறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

படப்பிடிப்புக்காகவே பயன்படுத்தப்படும் அந்த வாகனத்தில் பிரேக் சரியாக பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

ஏற்கனவே இந்த படப்பிடிப்பு தளத்தில் நடிகர் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்து ஒருவர் பலியானார். இதேபோல் நடிகர் ரஜினிகாந்தின் 'காலா', விஜய்யின் 'பிகில்' ஆகிய படங்களின் படப்பிடிப்பின் போதும் விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்