பொன்னமராவதியில், அழகியநாச்சியம்மன் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து 1,008 பெண்கள் குத்துவிளக்கிற்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏனாதி கிராமத்தில் காணியான் கோவிலில் ஆடி விழா நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கிடாய் வெட்டி படையலிட்டு வழிபாடு நடத்தினர்.
காரையூர் அருகே மேலத்தானியம் அடைக்கலங்கத்தார் கோவிலில் ஆடி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. மேலும் பக்தர்கள் பொங்கல் வைத்தும் வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருமயம் அருகே மணவாளங்கரை வீரப்ப ஊரணி கரையில் பெரிய கருப்பர், சங்கிலி கருப்பர், சின்ன கருப்பர், நொண்டி கருப்பர், பொட்டுக் காளியம்மன் கோவிலில் ஆடிதிருவிழா நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் கிடா வெட்டு நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பூசாரி அரிவாள் மேல் நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.