தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் அட்டை ஒப்படைக்கும் போராட்டம்...!

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்த தனியார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் ஆதார் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-06-13 09:42 GMT

தென்காசி,

தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன், மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் கந்தசாமி மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் சிவகிரி தாலுகா ராமநாதபுரம் அருகே உள்ள கோடாங்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அலுவலகத்தின் முன்பு அவர்கள் தங்களது கைகளில் ஆதார் அட்டைகள் மற்றும் ரேஷன் அட்டைகளை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அப்போது அவர்கள் இந்த அட்டைகளை அரசிடம் ஒப்படைக்க இருப்பதாக கோஷமிட்டனர். பின்னர் போலீசார் அவர்களில் சிலரை மட்டும் அலுவலகத்திற்குள் சென்று மனு கொடுக்குமாறு கூறினர். இதனைத்தொடர்ந்து கிராம மக்களில் ஒருசிலர் அலுவலகத்துக்குச் சென்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஆதார் மற்றும் ரேஷன் அட்டைகளை ஒப்படைப்பதாக கூறினார்கள். அப்போது அதிகாரிக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஊர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில், அரசு புறம்போக்கு நிலத்திற்கு விதிகளை மீறி பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன் அந்த கிராமத்திற்கு அதிகாரிகளுடன் நேரடியாக வந்து புறம்போக்கு இடம் என்றால் அந்தப் பட்டா ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார். இதன்பிறகு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்