கரும்பு ஏற்றி சென்ற டிராக்டர் கவிழ்ந்தது

விழுப்புரம் அருகே கரும்பு ஏற்றி சென்ற டிராக்டர் கவிழ்ந்தது போக்குவரத்து பாதிப்பு

Update: 2023-02-06 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே சாணிமேடு கிராமத்தில் இருந்து நேற்று காலை கரும்பு லோடுகளை ஏற்றிக்கொண்டு அரவைப்பணிக்காக முண்டியம்பாக்கம் தனியார் சர்க்கரை ஆலைக்கு டிராக்டர் டிரெய்லர் ஒன்று புறப்பட்டது. இந்த டிராக்டர் டிரெய்லரை சாணிமேட்டை சேர்ந்த சேஷாத்திரி(வயது 35) என்பவர் ஓட்டிச்சென்றார். இந்த டிராக்டர் டிரெய்லர், விழுப்புரம் அருகே அய்யூர்அகரம் மேம்பாலத்தில் சென்றபோது பாரம் தாங்காமல் ஆக்ஷில் கட்டாகி நடுரோட்டிலேயே டிராக்டர் டிரெய்லர் கவிழ்ந்தது. இதில் டிரெய்லரில் இருந்த கரும்பு லோடுகள் நடுரோட்டிலேயே சரிந்து விழுந்தது. அந்த சமயத்தில் டிராக்டரின் பின்னால் வந்த கார், அந்த டிரெய்லர் மீது கண்இமைக்கும் நேரத்தில் மோதியதில் காரின் முன்பகுதி மட்டும் சேதமடைந்தது. காரில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.

இந்த விபத்து காரணமாக விழுப்புரம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று மீட்பு வாகனத்தை வரவழைத்து விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தினர். பின்னர் சாலையில் சிதறிக்கிடந்த கரும்புகள் மற்றும் கவிழ்ந்து கிடந்த டிராக்டர் டிரெய்லரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்