பள்ளிக்கு ரூ.6 லட்சத்தில் கலையரங்கம் கட்டிக்கொடுத்த ஆசிரியர்

ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கு ரூ.6 லட்சத்தில் கலையரங்கம் கட்டிக்கொடுத்தார்.

Update: 2022-09-05 18:00 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிக்குளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை 1,086 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்தப்பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் கணக்கு பதிவியல், தணிக்கையியல் குரூப் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தொழிற்கல்வி பாடம் கற்பித்து வரும் பொம்மனப்பாடியை சேர்ந்த ஆசிரியர் ராதாகிருஷ்ணன் (வயது 58) என்பவர் தனது சொந்த செலவில் ரூ.6 லட்சத்தில் கலையரங்கம் கட்டி கொடுத்துள்ளார். மேலும் அவர் தனது சொந்த செலவில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தில் பள்ளி விளையாட்டு மைதானத்தை புதுப்பித்தது மட்டுமின்றி, ஓடுதளம், நீளம், உயரம் தாண்டுதல் தளங்கள் அமைத்து கொடுத்துள்ளார். மேலும் பள்ளியின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தனது சொந்த செலவில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் 11 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ளார். அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது சொந்த செலவில் பள்ளிக்கு கலையரங்கம் கட்டி கொடுத்தது, விளையாட்டு மைதானத்தை புதுப்பித்தது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியிருப்பது ஆசிரியர்களின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் ராதாகிருஷ்ணனின் செயலுக்கு அப்பள்ளி மாணவ-மாணவிகள் மட்டுமின்றி கிராம பொதுமக்களும் பாராட்டினர். மேலும் அவருக்கு அனைத்து தரப்பினரிடமும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்