பெரம்பலூர் மாவட்டத்தில் "கல்வியும் காவலும்" என்ற புதிய திட்டம் இன்று தொடக்கம்-போலீஸ் சூப்பிரண்டு தகவல்
தமிழகத்திலேயே முதல் முறையாக பெரம்பலூர் மாவட்டத்தில் "கல்வியும் காவலும்" என்ற புதிய திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கவுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்துள்ளார்.
"கிராம காவல்" திட்டம்
பெரம்பலூர் மாவட்ட போலீசார் மூலம் ஏற்கனவே "கிராம காவல்" என்ற திட்டம் தமிழகத்திலேயே முதல் முறையாக தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்திலேயே முதல் முறையாக பெரம்பலூர் மாவட்ட போலீசார் சார்பில் "கல்வியும் காவலும்" என்ற புதிய திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கூறியதாவது:-
இந்த திட்டத்தின் மூலம் முதற்கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்தும் அங்கு பணிபுரியும் ஒவ்வொரு போலீசாரின் பொறுப்புகள் பற்றியும் எடுத்துரைக்கப்படவுள்ளது.
காவல் துறையில் செயல்படும் பிரிவுகள்
காவல் துறையில் செயல்படும் பிரிவுகள் சட்டம் மற்றும் ஒழுங்கு, போக்குவரத்து பிரிவு, மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் மாவட்ட ஆயுதப்படை போலீசாரின் பணி மற்றும் பொறுப்புகள் ஆகியவை குறித்தும் எடுத்துரைக்கப்படவுள்ளது. காவல்துறையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவை குறித்தும் மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் வகுப்புகள் நடைபெறவுள்ளது. கணினி குற்றங்களை கண்டறிய உருவாக்கப்பட்டுள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்படவுள்ளது.
மேலும் மாணவ-மாணவிகளிடம் கஞ்சா போன்ற போதை பொருட்கள் உபயோகிப்பதனால் ஏற்படும் தீமைகள் மற்றும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுகள், சாலை விதிகளை பின்பற்றுதல், நீச்சல் தெரிந்தாலும் ஏரி, குளம், ஆறு, போன்றவைகளில் குளிக்க செல்வதால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் தற்கொலைகள் எதற்கும் தீர்வாகாது என்பதை விளக்கும் வகையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படவுள்ளது.
போட்டிகள் நடத்தப்படும்
இவை அனைத்தும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காவல் துறை மக்களின் நண்பன் என்பதை உணர்த்துவதற்கும், காவல்துறையினரின் அன்றாட செயல்பாடுகள் குறித்து எளிதில் மாணவ-மாணவிகள் அறிந்து கொள்வதற்காக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. குற்றம் செய்பவர்கள் மட்டுமே போலீஸ் நிலையம் வருவார்கள் என்ற பிம்பத்தை மாற்றி மாணவர்களுக்கும், காவல் துறைக்கும் நல்லுறவை வளர்க்கும் வகையில் இந்த கல்வியும் காவலும் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்வியும் காவலும் என்ற புதிய திட்டத்தை பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தொடங்கி வைக்கிறார். பின்னர் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ளது. மேலும் போலீஸ் நிலைய பார்வையிடல் தொடர்பாக மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டிகள் போலீசார் சார்பில் நடத்தப்படவுள்ளது. ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் போட்டிகள் நடத்தப்பட்டு, பின்னர் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.