புத்தாற்றில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும்

புத்தாற்றில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும்

Update: 2023-04-28 18:45 GMT

புத்தாற்றில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒன்றியக்குழு கூட்டம்

குடவாசல் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நேற்று தலைவர் கிளாரா செந்தில் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் தென்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா அறிக்கையை வாசித்தார்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர்.

அதன் விவரம் வருமாறு:-

தியாகராஜன்(த.மா.கா.): திருவிடைச்சேரி ஊராட்சி கோவில்பத்து கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மயானத்துக்கு செல்லும் வழியில் புத்தாற்றில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும்.

துணைத்தலைவர்: புத்தாற்றில் பாலம் கட்ட அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பப்பட்டு உள்ளது.

தியாகராஜன் (த.மா.கா.): தற்போது நமது அலுவலகத்தில் ஊழியர்கள் பணி செய்ய போதிய இடவசதி இல்லாத நிலையில் புதிதாக கட்டப்பட்டு பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில்

ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் எப்போது திறக்கப்படும்?

அரசு தான் முடிவு எடுக்கும்

தலைவர்: புதிய அலுவலக கட்டிட பணி முடிந்த நிலையில் அதற்கான அறிக்கை அரசுக்கு அனுப்பி உள்ளோம். திறப்பு விழா குறித்து அரசு தான் முடிவு எடுக்கும்.

கோபி (ம.தி.மு.க.): மணவாளநல்லூர் ஊராட்சி மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள குளத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த குளத்தினை சுத்தப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆணையர்: சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு உடனே தகவல் அனுப்பி அந்த குளத்தினை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் ரமாசெல்வம், ராஜேஸ்வரி கலியபெருமாள், மணிகண்டன், சாந்திபாஸ்கர், தமிழரசி சாமிநாதன், மஞ்சுளாகாசிராமன், உஷாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்