பிறந்த நாளில் தற்கொலை செய்த மருத்துவ மாணவர் - தூக்க மாத்திரைகளை தின்று உயிரைவிட்ட பரிதாபம்
விருதுநகரில் தூக்க மாத்திரைகளை தின்று மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்:
விருதுநகர் விக்னேஷ் காலனியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 48). இவர் ஆஸ்பத்திரியும், விருதுநகர் அக்ரஹாரம் தெருவில் மருந்து கடையும் நடத்தி வருகிறார். இவருடைய மூத்த மகன் லோகேஷ் (22). இவர் கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள ஜாலாலாபாத் பல்கலைக்கழகத்தில் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். கடந்த ஜூன் மாத இறுதியில் விடுமுறைக்காக விருதுநகர் வந்தார்.
ஆகஸ்டு 10-ந்தேதி இவரது பிறந்த நாள் ஆகும். நேற்று அவரது பிறந்த நாள் என்பதால், தனது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்றும், அதற்கு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக நேற்று முன்தினம் கேட்டு்ள்ளார்.
ஆனால் லோகேஷின் தாயார் பிறந்தநாளை எளிமையாக கொண்டாடலாம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவருத்தம் அடைந்த லோகேஷ் நேற்று முன்தினம் இரவு மருந்து கடைக்கு சென்று அதிக எண்ணிக்கை கொண்ட தூக்க மாத்திரை அட்டையை எடுத்துச்சென்றுள்ளார்.
பின்னர் அவர்களது ஆஸ்பத்திரிக்கு சென்று தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு, தனக்கு மயக்கம் வருவதாக ஆஸ்பத்திரியில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். அப்போது அவர்கள், லோகேஷின் சட்டைப்பையில் இருந்த மாத்திரை அட்டை காலியாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் லோகேஷ் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.