அருணாசலேஸ்வரர் கோவில் ஆனி திருமஞ்சன விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று ஆனி திருமஞ்சன விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று ஆனி திருமஞ்சன விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆனி திருமஞ்சனம்
சிவாலயங்களில் எழுந்தருளியுள்ள நடராஜருக்கு குறிப்பிமட்ட மாதத்தில் வரும் நாளில் நடைபெறும் பூஜைகள் சிறப்புக்குரியவை. அந்த வகையில் ஆனந்த நடனமாடும் நடராஜருக்கு மார்கழி திருவாதிரையில் அருணோதய கால பூஜையும், மாசி வளர்பிறை சதுர்த்தியில் சந்திகால பூஜையும், சித்திரை திருவோணத்தில் மதிய பூஜையும், ஆனி உத்திரத்தில் சாயரட்சை பூஜையும், ஆவணி வளர்பிறை சதுர்த்தி மற்றும் புரட்டாசி வளர்பிறை சதுர்த்தியில் அர்த்தஜாம பூஜையும் நடைபெறுகிறது.
அதேபோல் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருமஞ்சனமும் மிகவும் சிறப்புக்குரியது.
ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும், அலங்காரத்துடன் ஆனி திருமஞ்சனம் செய்யப்படுகிறது.
சிறப்பு அலங்காரம்
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் எழுந்தருளி உள்ள நடராஜருக்கு ஆனி திருமஞ்சன விழா நேற்று நடைபெற்றது. அதையொட்டி நேற்று முன்தினம் இரவு அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து நடராஜருக்கு சிறப்பு ஆராதனை நடந்தது.
தொடர்ந்து நேற்று காலை நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
இதையடுத்து காலை 9.15 மணியளவில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மங்கல வாத்தியங்கள் முழங்க மகா தீபாராதனை நடந்தது. அப்போது சாமி தரிசனம் செய்த பக்தர்கள் 'அரோகரா' கோஷம் எழுப்பினர்.
பின்னர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மனும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து பக்தர்கள் மத்தியில் ஆடியபடி வந்த நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மனும் கோவிலின் 5-ம் பிரகாரம் வழியாக வந்து திருமஞ்சன கோபுரம் வழியாக புறப்பட்டு மாட வீதியில் உலா வந்தனர். வழி நெடுகிலும் பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்தனர்.