ஒரு ஏக்கர் கரும்பு பயிரை டிராக்டர் மூலம் உழுது அழித்த விவசாயி
விருத்தாசலம் அருகே மருந்து தெளித்தும் நோயை கட்டுப்படுத்த முடியாததால் ஒரு ஏக்கர் கரும்பு பயிரை டிராக்டர் மூலம் உழுது விவசாயி அழித்தார்.
கம்மாபுரம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள காவனூர், கீரனூர், வல்லியம், பவழங்குடி, மேலப்பாளையூர் உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்து பராமரித்து வந்தனர். பயிர்கள் நன்கு வளர்ந்து வந்ததால் விவசாயிகள் இந்தாண்டு நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் கரும்பு பயிரில் மஞ்சள் நோய் தாக்கியது. இதை கட்டுப்படுத்த பல்வேறு மருந்துகளை விவசாயிகள் தெளித்தனர்.
இருப்பினும் கட்டுப்படுத்த முடியவில்லை. இது குறித்து விவசாயிகள் வேளாண் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இருப்பினும் அவர்கள், நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கரும்பு பயிரை பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கவில்லை. இதன் காரணமாக பயிர்கள் தற்போது மேற்கொண்டு வளர்ச்சி அடையாமல் வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நஷ்டம்
இதில் விரக்தியடைந்த விவசாயி ஒருவர், கீரனூர்-மருங்கூர் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு ஏக்கரில் தான் சாகுபடி செய்திருந்த கரும்பு பயிர்களை வேறு வழியின்றி டிராக்டர் மூலம் உழுது அழிக்கும் பணியில் ஈடுபட்டார். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து கரும்பு பயிரை சாகுபடி செய்து பராமரித்து வந்தோம். கரும்புகள் 4 அடி வளர்ந்து வந்ததால், இந்தாண்டு விளைச்சல் அமோகமாக இருக்கும். இதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும் என நாங்கள் நினைத்தோம். ஆனால் நோய் தாக்குதலால் எங்களது பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வீணாகி விட்டது. இன்னும் 2 அடி உயர்ந்து இருந்தால் கூட ஒரளவுக்கு எங்களுக்கு வருமானம் கிடைத்து இருக்கும். ஆனால் தற்போது கரும்புகள் எதுக்கும் பயனின்றி காய்ந்து வீணாகி விட்டது. இதன் மூலம் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே இதை தவிர்க்க நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட கரும்பு பயிரை அதிகாரிகள் பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.