திருவாரூர் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுவன்

விஜயவாடாவில் இருந்து தந்தையை தேடி வந்து திருவாரூர் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுவனை ரெயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டனர்.

Update: 2022-10-08 18:45 GMT

விஜயவாடாவில் இருந்து தந்தையை தேடி வந்து திருவாரூர் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுவனை ரெயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டனர்.

தனியாக சுற்றித்திரிந்த சிறுவன்

திருவாரூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயச்சந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஏட்டு குருமூர்த்தி ஆகியோர் நேற்று வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திருவாரூர் ரெயில் நிலைய வளாகத்தில் சந்தேகப்படும் வகையில் ஒரு சிறுவன் தனியாக சுற்றித்திரிந்துள்ளான். இதனால் சந்தேகமடைந்த ரெயில்வே பாதுபாப்பு படையினர் அந்த சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர்.

விஜயவாடாவை சேர்ந்தவர்

விசாரணையில் அந்த சிறுவன், ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டம் குணத்தலா விநாயகர் கோவில் தெரு காந்தி காலனியை சேர்ந்த சதீஷ்-கவுசன்யா தம்பதியினரின் மகன் குண கல்யாண் (வயது 13) என்பதும், அந்த பகுதியில் 8-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும் கவுசன்யா, தனது கணவர் சதீஷை விட்டு பிரிந்து தனியாக தனது மகனுடன் வசித்து வருகிறார். கடந்த 6-ந் தேதி குண கல்யாண் வீட்டில் இருந்த ரூ.500-யை எடுத்து கொண்டு தனது தந்தையை பார்க்க போகிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

வேளாங்கண்ணி சென்றுள்ளான்

மீண்டும் சிறுவன் வீடு திரும்பாத காரணத்தினால் பதற்றமடைந்த தாய் சவுசன்யா அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் குண கல்யாண் விஜயவாடாவில் இருந்து ரெயில் மூலம் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளான்.

அங்கு சுற்றி பார்த்துவிட்டு நேற்று காலை பெங்களுரு செல்லும் ரெயிலில் ஏறி திருவாரூர் ரெயில் நிலையத்துக்கு வந்துள்ளான். அடுத்து எங்கு செல்வது என்பது தெரியாமல் நடைமேடையில் சுற்றி வந்தது தெரிய வந்தது.

பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவான்

இதனையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் திருவாரூர் மாவட்ட குழந்தைகள் நல திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகலாதனிடம் சிறுவன் குண கல்யானை ஒப்படைத்தனர்.

சிறுவனின் தாய் சவுசன்யாவிற்கும், அவர் புகார் அளித்த போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உரிய விசாரணை நடத்திய பின்பு சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவான் என குழந்தைகள் நல அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்