டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பலி
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 5 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 5 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
டெங்கு காய்ச்சல்
தமிழகம் முழுவதும் பருவநிலை மாற்றம் காரணமாக பொதுமக்கள் காய்ச்சல், சளி போன்ற நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது.
இதனை கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறை அலுவலர்கள், அரசு அதிகாரிகள் வீடு, வீடாக சென்று கொசுப்புழுக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு டெங்கு காய்ச்சல் வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் சிவராஜ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). இவருடைய மனைவி சுமித்ரா (35), இவர்களுக்கு பிரித்திகா (15), தாரணி (13), யோகலட்சுமி (7), அபிநிதி (5), புருஷோத்தமன் என 5 குழந்தைகள் உள்ளனர். இதில் யோகலட்சுமி, அபிநிதி, புருஷோத்தமன் ஆகிய 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 23-ந் தேதி திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
சிறுமி பலி
இதையடுத்து யோகலட்சுமி மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து கடந்த 26-ந் தேதி அபிநிதி மற்றும் புருஷோத்தமன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி அபிநிதி பரிதாபமாக இறந்தாள். புருஷோத்தமனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சலால் இறந்த சிறுமியின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது. இதைத்தொடர்ந்து சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பலியான சம்பவம் சிவராஜ்பேட்டை பகுதியில் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.