விவசாயியிடம் ரூ.9 ஆயிரத்து 500 மோசடி செய்தவர் கைது

மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் அனுப்பிவைப்பதாக கூறி விவசாயியிடம் ரூ.9 ஆயிரத்து 500 மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-29 18:45 GMT

மோட்டார்சைக்கிள் உதிரி பாகங்கள்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா சவளக்காரன் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது36). விவசாயியான இவர் தனது மோட்டார்சைக்கிளுக்கு உதிரிபாகங்கள் வாங்க முடிவு செய்தார். இதற்காக அவர் தனது முகநூல் பக்கத்தில் தேடி கொண்டிருந்தார். அப்போது அவருடைய முகநூலில் மோட்டார்சைக்கிள் உதிரி பாகங்களுக்கான விளம்பரம் ஒன்று வந்துள்ளது. இதை பார்த்த சக்திவேல், அதில் இருந்த எண்ணை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டார்.

அப்போது மறுமுனையில் பேசிய மர்மநபர் மோட்டார்சைக்கிளுக்கு தேவையான உதிரிபாகங்களுக்கான புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்தார்.

இதை பார்த்த சக்திவேல் அதில் குறிப்பிட்ட 2 உதிரி பாங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டார். அப்போது அந்த நபர் உதிரி பாகங்களை அனுப்பி வைக்க வேண்டுமானால் அதற்கான முழுபணம் ரூ.9 ஆயிரத்து 500-ஐ செலுத்த வேண்டும். முதலில் ஆன்லைன் மூலம் ரூ.1 அனுப்பி வைப்பதாகவும், பின்னர் அதே நம்பரில் ரூ.9 ஆயிரத்து 500-ஐ செலுத்த வேண்டும் என்று கூறினார்.

ரூ.9 ஆயிரத்து 500 மோசடி

அதன்படி அந்த மர்மநபர் சக்திவேலுக்கு ஆன்லைன் மூலம் ரூ.1 அனுப்பி வைத்தார். இதைத்தொடர்ந்து சக்திவேல் ரூ.9 ஆயிரத்து 500-ஐ செலுத்தினார். பணம் வந்ததை உறுதி செய்த அந்த நபர் சக்திவேலிடம் கூரியர் மூலம் மோட்டார்சைக்கிளின் உதிரிபாகங்களை அனுப்பிவைப்பதாகவும், அதற்கான ரசீதை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் அவர் கூறியபடி எந்த ரசீதும் வரவில்லை. சிறிது நேரம் கழித்து அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

கைது

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சக்திவேல் திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

விசாரணையில், சக்திவேலிடம் இருந்து ரூ.9 ஆயிரத்து 500 மோசடி செய்தது திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பகுதியை சேர்ந்த தேன் செல்வம் (34) என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தேன்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்