9 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு
வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் தேர்தலில் 9 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
சென்னை,
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் நேற்று வரிவிதிப்பு மேல்முறையீட்டுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடந்த இத்தேர்தலில் 9 கவுன்சிலர்கள் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த தேர்தலில் மாநகராட்சியின் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக ஏ.சந்திரன் (வார்டு-27), க.தேவி கதிரேஷன் (39), ராஜேஷ் ஜெயின் (57), நா.உஷா (83), ம.கமல் (86), ஜெ.புஷ்பலதா (103), எம்.ஸ்ரீதரன் (140), வ.செல்வக்குமார் (154), அ.முருகேசன் (200) ஆகிய 9 கவுன்சிலர்கள் 2023-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதியின் கீழ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட குழு உறுப்பினர்களுக்கு மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் கமிஷனர் ராதாகிருஷ்ணன் சான்றிதழ்களை வழங்கினார்.
இதேபோல் சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் மாநகராட்சி கூட்ட அரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் அழகுமீனா தலைமையில் நடந்தது. மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் ஜி.காமராஜ், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதில் தி.மு.க.வை சேர்ந்த 9 கவுன்சிலர்கள் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.