மாணவி பாலியல் வன்கொடுமை: "நீதி கிடைக்கும் வரை பா.ஜ.க. துணை நிற்கும்" - எல். முருகன்
பா.ஜ.க.வினரை கைது செய்வதன் மூலம் நடந்த சம்பவங்களை மறைக்க தமிழக அரசு முயற்சி செய்வதாக எல். முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை,
மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதை கண்டித்தும், அதற்கான நீதி கேட்டும் போராட்டம் நடத்தச் சென்ற, தமிழக பாஜகவின் மூத்த தலைவர் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட, தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்களை, காவல்துறை கைது செய்திருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டு கைதாகி உள்ள ஞானசேகரன் என்ற நபர் மீது ஏற்கெனவே வழக்குகள் இருப்பதும், அவர் தி.மு.க.-வின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர் போன்றோருக்கு நெருக்கமாக இருப்பவர் என்ற தகவலும், பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாக நாளொரு முறை பொய்யுரைத்து வரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், குற்றவாளி தி.மு.க.-வை சேர்ந்தவர் என்பதால் நடவடிக்கையில் தாமதப்படுத்துவது எப்படி தீர்வாகும். பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை பொது வெளியில் கசிய விட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்க குற்றமாகும்.
பெண்களுக்கு எதிரான குற்றம், அதுவும் படிக்கச் செல்கின்ற கல்லூரிக்குள் அத்துமீறிய ஒரு நபரால் மாணவிகளுக்கு துன்பம் ஏற்படுவதை எண்ணி, காவல்துறையை தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்ற முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தங்களையும், தங்களது போலி திராவிட மாடல் ஆட்சியையும் சுய பரிசோதனை செய்ய வேண்டிய காலமிது.
ஒரே ஒரு குற்றவாளியை மட்டும் இதுவரை கைது செய்திருக்கும் காவல்துறை இது சம்பந்தப்பட்டவர்கள் யார் யார் என்பதை தீர விசாரிக்க வேண்டும். கொடூர சம்பவம் நடக்காமல் தடுப்பது தான் அரசின் கடமை. இப்படி ஒவ்வொரு குற்றம் நடக்கும் போதும், குற்றம் செய்தவரை கைது செய்துவிட்டோம் என்று பிதற்றிக் கொண்டிருக்காமல், குற்றம் நடக்காமல் தடுக்க வேண்டிய வழிகளை, தமிழக அரசும், தமிழக அரசின் கைப்பாவையாக உள்ள காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும்.
பா.ஜ.க.வினரை கைது செய்வதன் மூலம் நடந்த சம்பவங்களை மறைக்க தமிழக அரசு முயற்சி செய்கிறது. உண்மை நிலை என்னவென்பதை தமிழக மக்களுக்கு இந்த போலி திராவிட மாடல் அரசு சொல்ல வேண்டும்.
நீதி கிடைக்கும் வரை பா.ஜ.க. பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு துணையாக நிற்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.