'அடையாளத்தை வெளியிடுவதால்தான் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க வருவதில்லை' - வானதி சீனிவாசன்
அடையாளத்தை வெளியிடுவதால்தான் பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க வருவதில்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை,
பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் துணை முதல்-அமைச்சரை நேரில் சந்திக்கும் அளவிற்கு முக்கியமான நபராக இருந்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாக வந்து புகார் கொடுத்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.
பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரைக் கூட வெளியிடக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டும் கூறியிருக்கின்றன. ஆனால் காவல்துறைக்கு தேவையான அளவு உணர்திறன் இல்லை. பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம் உள்பட அவர்களின் புகார் தொடர்பான முழு தகவல்களை வெளியிடுகிறார்கள்.
அவ்வாறு வெளியிட்ட பிறகு அந்த பெண்களால் தொடர்ந்து வழக்கை சந்திக்க முடிவதில்லை, அல்லது அவர்கள் மிரட்டப்படுகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க முன்வருவதில்லை. இதற்காகவே பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்று வலியுறுத்துகிறோம்."
இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.