மாணவி வன்கொடுமை விவகாரம்: எப்.ஐ.ஆர். நகலை பரப்புவோர் மீது நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

பாலியல் கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்

Update: 2024-12-26 08:53 GMT

சென்னை,

சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அல்லாது வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் படித்து வருகிறார்கள். இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது பயின்று வரும் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

மாணவி கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து குற்றவாளியை 3 தனிப்படைகள் அமைத்து வலைவீசி தேடி வந்தனர். இதையடுத்து இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்ட ஞானசேகரன் (37) என்பவரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் கோட்டூர்புரம் மண்டபம் சாலையில் பிளாட்பாரத்தில் பிரியாணி கடை நடத்தி வருவது தெரியவந்தது.

ஞானசேகரன் கைதை தொடர்ந்து இந்த பாலியல் குற்ற செயலில் ஈடுபட்ட மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஞானசேகரனை போலீசார் கைது செய்ய முற்படும் போது தப்பியோட முயன்றார் என்றும், அப்போது அவர் கிழே தவறி விழுந்து இடது கை மற்றும் இடதுகாலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஞானசேகரனுக்கு மாவு கட்டு போடப்பட்டது. அதன் பிறகு சைதாப்பேட்டை குற்றவியல் கோர்ட்டில் ஞானசேகரன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக ஜனவரி 8-ம் தேதி வரையில் (15 நாட்கள்) கோர்ட்டு காவலில் வைக்க சைதாப்பேட்டை குற்றவியல் கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் எப்.ஐ.ஆரில் மாணவி கூறிய புகார்கள் குறித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பு எற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்த புகைப்படமோ, எப்.ஐஆர். நகலையோ இணையதளத்தில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் அருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்