புதுக்கோட்டையில் கடந்த 9 மாதங்களில் 88½ கிலோ கஞ்சா பறிமுதல்; 149 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 9 மாதங்களில் 88½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 149 பேர் கைது செய்யப்பட்டனர்.
தனிப்படை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா, லாட்டரி விற்பனை உள்பட சட்டவிரோத செயல்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களையும் கைது செய்து வருகின்றனர்.
இதில் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 9 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடா்பாக 85 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குண்டர் சட்டம்
இதேபோல் இந்த சோதனையில் மொத்தம் 88 கிலோ 553 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 44 ஆயிரத்து 825 ஆகும். மேலும் கஞ்சா வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. கஞ்சா விற்பனையை தடுக்க தொடர்ந்து தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேற்கண்ட தகவலை போலீசார் தெரிவித்தனர்.