சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு: சேலத்தில் 8 மையங்களில் 8,747 பேர் எழுதினர் 1,756 பேர் எழுதவில்லை

சேலத்தில் 8 மையங்களில் நடைபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 8 ஆயிரத்து 747 பேர் எழுதினர். 1,756 பேர் தேர்வு எழுத வரவில்லை.

Update: 2022-06-25 21:47 GMT

சேலம், 

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழக காவல்துறையில் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை எழுதுவதற்கு 10 ஆயிரத்து 503 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 1,968 பேர் பெண்கள் ஆவர். தேர்வர்களுக்கு ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு சேலத்தில் 8 மையங்களில் நேற்று நடைபெற்றது. இதற்காக தேர்வர்கள் காலை 8 மணி முதல் மையங்களுக்கு வரத்தொடங்கினர். பின்னர் அவர்களை போலீசார் சோதனை செய்து மையங்களுக்கு அனுப்பினர். ஹால் டிக்கெட், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, நீலம் அல்லது கருப்பு நிற பந்துமுனை பேனா ஆகியவற்றை மட்டும் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

8,747 பேர் எழுதினர்

தேர்வர்களை செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள் மையத்துக்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. காலை 10 மணிக்கு தேர்வர்களுக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்டு தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை 1,685 பெண்கள் உள்பட 8 ஆயிரத்து 747 பேர் எழுதினர். 1,756 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு எழுதும் மையங்களை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் டி.ஐ.ஜி. லட்சுமி மேற்பார்வையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ், மாநகர போலீஸ் துணை கமிஷனர் லாவண்யா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாலை 3 மணிக்கு தமிழ் தகுதித்தேர்வு நடைபெற்றது. இதில் ஏராளமான போலீஸ் துறையை சேர்ந்தவர்களும் எழுதினர்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் எழுத்து தேர்வையொட்டி பாதுகாப்பு பணியில் 7 போலீஸ் துணை சூப்பிரண்டுகள், 29 இன்ஸ்பெக்டர்கள், 107 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1,050 போலீசார் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்