விராலிமலை அருகே ஜல்லிக்கட்டில் 704 காளைகள் சீறிப்பாய்ந்தன; மாடுகள் முட்டியதில் 17 பேர் காயம்

விராலிமலை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 704 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில், மாடுகள் முட்டியதில் 17 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-03-24 18:24 GMT

ஜல்லிக்கட்டு

விராலிமலை அருகே உள்ள விராலூரில் குரும்பச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு காரணங்களுக்காக ஜல்லிக்கட்டு நடத்தப்படாமல் இருந்து வந்தது.

இந்தநிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவது என ஊர்மக்கள் சார்பாக முடிவு செய்யப்பட்டு வாடிவாசல் அமைக்கும் பணியானது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து பணிகள் நிறைவடைந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

சீறிப்பாய்ந்த காளைகள்

இதையடுத்து, நேற்று காலை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதனை தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 704 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டியில் 142 வீரர்கள் கலந்துகொண்டு வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு காலை 8.50 மணிக்கு தொடங்கி மதியம் 1.55 மணிக்கு நிறைவடைந்தது.

17 பேர் காயம்

இதில் காளைகள் முட்டியதில் 17 பேர் காயமடைந்தனர். அதில் 4 பேர் விராலிமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு வாடிவாசல் அருகே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்திரி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்