அறச்சலூர் பகுதியில் அட்டகாசம் செய்யும் சிறுத்தைப்புலியை பிடிக்க 7 குழுக்கள் அமைப்பு; அமைச்சர் முத்துசாமி தகவல்

அறச்சலூர் பகுதியில் அட்டகாசம் செய்யும் சிறுத்தைப்புலியை பிடிக்க 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.;

Update:2023-10-27 02:54 IST

அறச்சலூர்

அறச்சலூர் பகுதியில் அட்டகாசம் செய்யும் சிறுத்தைப்புலியை பிடிக்க 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.

சிறுத்தைப்புலி அட்டகாசம்

அறச்சலூர் கிழக்கு தலவுமலை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்துக்குள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு புகுந்த சிறுத்தைப்புலி அங்கு பட்டிக்குள் அடைக்கப்பட்டு இருந்த கன்றுக்குட்டி ஒன்றை கடித்து இழுத்து சென்றது.

இதைத்தொடர்ந்து கடந்த 6 நாட்களுக்கு முன்பு வெள்ளிவலசு வெள்ளியங்காடு பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவரது பட்டிக்குள் புகுந்த சிறுத்தைப்புலி பட்டியில் ஆட்டை கடித்து கொன்று இழுத்து சென்றது. இதையடுத்து சிறுத்தைப்புலி நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூண்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் ஆய்வு

இந்த நிலையில் தலவுமலை பகுதியில் நடமாடும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிப்பதற்காக, வனத்துறையின் மூலம் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அட்டவணை அனுமன்பள்ளி பகுதியில் வனத்துறையின் மூலம் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

மொடக்குறிச்சி தாலுகாவுக்குட்பட்ட அறச்சலூர், வாய்ப்பாடி, கொங்கன்பாளையம், அட்டவணை அனுமன்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்ததும் சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறை அமைச்சர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

7 குழுக்கள் அமைப்பு

சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதை தானியங்கி கேமரா மூலமாக ஈரோடு வனத்துறையினர் உறுதி செய்து அதை பிடிப்பதற்காக வனத்துறையின் மூலம் தனி அனுமதியினையும் பெற்றுள்ளனர். மேலும் சிறுத்தைப்புலியை கண்காணித்து பிடிப்பதற்காக 13 இடங்களில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 4 இடங்களில் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்களின் கோரிக்கைகளின்படி, கூடுதலான கூண்டுகள் வைப்பதற்கும் வனத்துறையின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வனத்துறை அலுவலர்கள் மூலம் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கவனத்துடன் இருக்கவேண்டும். சிறுத்தைப்புலி தாக்கி இறந்த ஆட்டுக்கு ரூ.3 ஆயிரமும், கன்றுக்குட்டிக்கு ரூ.25 ஆயிரமும் இழப்பீட்டு தொகை வழங்கப்படும். விரைவாக சிறுத்தைப்புலி பிடிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வன அலுவலர் சுதாகர், வன அலுவலர்கள், வனச்சரகர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்