விராலிமலையில் ஜல்லிக்கட்டில் 651 காளைகள் சீறிப்பாய்ந்தன; மாடுகள் முட்டி 21 பேர் காயம்

விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 651 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் மாடுகள் முட்டி 21 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-03-13 19:00 GMT

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இருந்து கீரனூர் செல்லும் சாலையில் பட்டமரத்தான் கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு அம்மன் குளத்தில் உள்ள வாடிவாசலில் நேற்று நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டியினை இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டி காலை 8.30 மணிக்கு தொடங்கியது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 651 காளைகளும், 125 மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டனர். முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. பின்னர் மற்ற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன.

21 பேர் காயம்

சீறிப்பாய்ந்த ஜல்லிக்கட்டு காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் தாவிச்சென்றது. இதையடுத்து, வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டு மாலை 3 மணிக்கு நிறைவடைந்தது.

மாடுகள் முட்டியதில் வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என 21 பேர் காயமடைந்தனர். அதில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற அனைவருக்கும் வாடிவாசல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை

வாடிவாசல் அருகே 2 ஜல்லிக்கட்டு காளைகளுக்கு காயம் ஏற்பட்டது. அதற்கு வாடிவாசல் அருகே கால்நடை மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்து மாட்டின் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். பாதுகாப்பு பணியில் புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்ரி மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்