இடைத்தேர்தலில் 60.47 சதவீத வாக்குப்பதிவு
கடலூர்மாவட்டத்தில் ஊராட்சி, ஒன்றியங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்தது. இதில் 60.47 சதவீத வாக்குகள் பதிவானது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும், 4 ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிக்கும், 26 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் என மொத்தம் 31 பதவி இடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் ஜூலை 9-ந் தேதி (அதாவது நேற்று) நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 8 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 17 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 43 பேரும் என மொத்தம் 68 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். பின்னர் வேட்பு மனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு 15 மனுக்கள் திரும்ப பெறப்பட்டதன் மூலம் 20 வார்டுகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வாகினர். மேலும் 2 வார்டுகளுக்கு ஒருவர் கூட மனுத்தாக்கல் செய்யவில்லை.
152 வாக்குச்சாவடிகள்
இந்த நிலையில் மீதமுள்ள கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 26-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. சார்பில் மனோரஞ்சிதம், பா.ம.க. சார்பில் தமிழ்ச்செல்வி, அ.ம.மு.க. சார்பில் வாணிஸ்ரீ ஆகியோர் போட்டியிட்டனர். இதேபோல் மருதாடு, சேப்ளாநத்தம் (தெற்கு), டி.புத்தூர், நஞ்சைமகத்து வாழ்க்கை ஆகிய பகுதி ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிக்கும், கடலூர் முதுநகர் (நான்முனிசிபல்) 9-வது வார்டுக்கும், கீழ்குமாரமங்கலம் 6-வது வார்டுக்கும், காட்டுமன்னார்கோவில் ஒன்றியம் நாட்டார்மங்கலத்தில் 3-வது வார்டுக்கும், குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வடக்குத்து ஊராட்சியில் 8-வது வார்டுக்கும் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதற்காக மொத்தம் 152 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கினாலும் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் மக்கள் இன்றி வெறிச்சோடியே கிடந்தன. 8 மணிக்கு பிறகே ஒவ்வொருவராக வந்து வாக்களித்து சென்றனர். அப்போது வாக்களிக்க வந்த மக்களுக்கு தொ்மல் ஸ்கேனா் மூலம் உடல் வெப்பநிலை பாிசோதனை செய்யப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடந்தது. இதில் பெரும்பாலான மக்கள் வாக்களிக்க விருப்பமின்றி, வேலைகளுக்கு சென்று விட்டனர். இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடந்தது. இதில் அனைத்து பகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
இதில் 61 ஆயிரத்து 591 வாக்காளர்களில் ஆண்கள் 18 ஆயிரத்து 173 பேரும், பெண்கள் 19 ஆயிரத்து 72 பேரும் என மொத்தம் 37 ஆயிரத்து 245 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இது 60.47 சதவீத வாக்குப்பதிவாகும். பின்னர் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் கடலூர், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, கம்மாபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்கு எண்ணும் மையமான வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகிறது.