கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு: அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள உதவித் தொகையை உயர்த்திக் கொடுக்க வேண்டும் - ஓபிஎஸ்

தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ள இடங்களிலும், ஆழமான பகுதிகளிலும் எச்சரிக்கை பலகைகள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Update: 2022-10-05 02:44 GMT

சென்னை,

தஞ்சாவூர் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள உதவித் தொகையை உயர்த்திக் கொடுக்க நடவடிக்கை வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தண்ணீரின் வேகம் அதிகரித்ததே உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு இருந்தால் உயிரிழப்பு தடுக்கப்பட்டு இருக்கும். இனி வருங்காலங்களில் தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ள இடங்களிலும், ஆழமான பகுதிகளிலும் எச்சரிக்கை பலகைகள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள உதவித் தொகையை உயர்த்திக் கொடுக்க நடவடிக்கை வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்