ஜல்லிக்கட்டில் 574 காளைகள் சீறிப்பாய்ந்தன; மாடுகள் முட்டியதில் 14 பேர் காயம்

விராலிமலை அருகே நடந்த ஜல்லிக்கட்டில் 574 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில், மாடுகள் முட்டியதில் 14 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-03-05 18:56 GMT

ஜல்லிக்கட்டு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள கல்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த வாடிவாசல் அமைக்கும் பணிகள் கடந்த 10 நாட்களாக நடந்து வந்தது.

இதையடுத்து, நேற்று காலை ஜல்லிக்கட்டு போட்டி இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி தலைமையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை.

14 பேர் காயம்

அதனை தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, கரூர், திண்டுக்கல், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 574 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 104 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காளைகள் ஒவ்வொன்றும் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து சென்றன. அதனை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் வெள்ளி நாணயங்கள், ரொக்கம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.

காலை 9.05 மணிக்கு தொடங்கிய போட்டியானது மதியம் 2.40 மணிக்கு நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 14 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு வாடிவாசல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பாதுகாப்பு பணி

கல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியினை பார்வையிட்டனர். புதுக்கோட்டை கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில், இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்திரி உள்பட 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைமையில் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்