தந்தை, மகன் உள்பட 5 பேர் கைது
பழனியில், கழுத்தை அறுத்து தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை-மகன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழனி மருத்துவர் நகரை சேர்ந்தவர் முத்தையா (வயது 45). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை இவர், பழனி-கொடைக்கானல் சாலையில் உள்ள புற்றுக்கோவில் என்ற இடத்தில் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முத்தையாவை கொலை செய்தது மருத்துவர்நகரை சேர்ந்த ஆண்டிச்சாமி (வயது 46), அவருடைய மகன் தீபக் (24) மற்றும் அதே பகுதியை சேர்ந்த முனிச்செல்வன் (30), பாண்டித்துரை (25), பழனி சுப்பிரமணியபுரம் சாலை பகுதியை சேர்ந்த விஜய் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து சண்முகநதி பகுதியில் பதுங்கி இருந்த 5 பேரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையிலான தனிப்படையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். ஆண்டிச்சாமிக்கும், முத்தையாவுக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் ஆண்டிச்சாமி, தனது மகன் தீபக் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து முத்தையாவை தீர்த்து கட்டியது தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, கொலைக்கு பயன்படுத்திய 3 கத்திகள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.