4-ம் வகுப்பு மாணவனை துடைப்பத்தால் அடித்த விவகாரம்: குழந்தைகள் நல அலுவலர் பள்ளியில் நேரில் விசாரணை

4-ம் வகுப்பு மாணவனை துடைப்பத்தால் அடித்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் நல அலுவலர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

Update: 2022-09-29 17:50 GMT

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில், கடந்த 22-ந் தேதி அரியலூர் மின்நகரை சேர்ந்த ஆசிரியை இளவரசி கரும்பலகையில் எழுதியிருந்ததை 4-ம் வகுப்பு மாணவர் ஒருவர் அழித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்த ஆசிரியை மாணவனை துடைப்பத்தால் அடித்ததாக தெரிகிறது. மேலும் இதுகுறித்து வீட்டிலும், வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என ஆசிரியர் எச்சரித்து அனுப்பியுள்ளார். இந்த தகவல் ஓரிரு நாட்கள் கழித்து மாணவனின் பெற்றோருக்கு தெரியவந்தது.

குழந்தைகள் நல அலுவலர் விசாரணை

இதையடுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மாணவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் துரைமுருகன், போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர்கணேஷ் ஆகியோர் வாலாஜாநகரம் பள்ளிக்கு சென்று ஆசிரியை இளவரசி மற்றும் அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியை இளவரசி மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்