பெங்களூரில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 480 கிலோ குட்கா பறிமுதல்

திண்டுக்கல் அருகே பெங்களூரில் இருந்து காரில் குட்கா கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-06 08:15 GMT

திண்டுக்கல்:

தமிழகத்தில் குட்கா மற்றும் போதை பாக்குகள் விற்க தடை விதிக்கப்பட்டபோதும் வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சாணார்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குட்கா பதுக்கி அப்பகுதி கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவுபடி எஸ்.பி. தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சேக்தாவூத் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது பெங்களூரில் இருந்து காரில் குட்கா கடத்தி வந்து கொசவபட்டியில் உள்ள வீட்டில் பதுக்கி இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் திண்டுக்கல் ஆர்.எம். காலனி மேற்கு அசோக்நகரை சேர்ந்த மணிகண்டன் (வயது 42), வேடசந்தூர் மாரம்பாடியை சேர்ந்த சத்யா (35), மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த அலெக்ஸ் (23) ஆகிய 3 பேரும் சேர்ந்து வெளி மாநிலங்களில் இருந்தும் குட்கா கடத்தி வந்து கடைகளுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதற்காக கொசவபட்டியில் உள்ள அலெக்சின் தாயார் வீட்டில் குட்கா பதுக்கியதும் போலீசார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அலெக்சின் தாயார் அமுதா (47) வையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 480 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் ஜெயக்குமாரிடம் ஒப்படைத்தனர். அவர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்