மத்திய அரசின் அடையாள அட்டை பெற 4½ லட்சம் தொழிலாளர்கள் பதிவு
மத்திய அரசின் அடையாள அட்டை பெற 4½ லட்சம் தொழிலாளர்கள் பதிவு
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை மத்திய அரசின் அடையாள அட்டை பெற 4½ லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர் என்று தொழிலாளர் இணை ஆணையர் கோவிந்தன் கூறினார்.
சிறப்பு பதிவு முகாம்
இந்தியாவில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு நலத்திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்பினை உருவாக்கும் பொருட்டு தொழிலாளர்கள் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் சார்பில் அடையாள அட்டை (ஈஸ்ரம்) வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி தஞ்சை மேட்டு எல்லையம்மன்கோவில் தெருவில் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு தொழிலாளர் நல உதவி ஆணையர் தனபாலன் தலைமை தாங்கினார். தன்னார்வலர் பேர்நீதிஆழ்வார், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் அன்பு, மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
4½ லட்சம் பேர் பதிவு
முகாமை திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் கோவிந்தன் தொடங்கி வைத்து பதிவு செய்த தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசின் அடையாள அட்டை பெறுவதற்கு 18 வயது முதல் 59 வயதிற்குள் இருக்க வேண்டும். வருமான வரி செலுத்துபவராக இருக்க கூடாது. அமைப்புசாரா தொழிலாளர்களாக மட்டுமே இருக்க வேண்டும். பதிவு செய்ய ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், படிப்பு சான்றிதழ் (இருந்தால்) எடுத்து வர வேண்டும்.
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 61 ஆயிரத்து 242 தொழிலாளர்கள் இதில் பதிவு செய்துள்ளனர். இதில் பதிவு செய்தவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.