திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு..!

திருப்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-09-28 06:12 GMT

தர்மபுரி,

திருப்பத்தூர் மாவட்டம் சிவராஜ் பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (45) மற்றும் சுமித்ரா(35) ஆகிய தம்பதியினருக்கு பிரித்திகா (15), தாரணி (13), யோகலட்சுமி (7), அபிநிதி(4), புருஷோத்தமன் 8 மாத கைக்குழந்தை என 5 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் யோகலட்சுமி, அபிநிதி, புருஷோத்தமன் ஆகிய 3 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 23-ந் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் யோகலட்சுமி மட்டும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலிருந்து தற்போது பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலிருந்து அபிநிதி மற்றும் புருஷோத்தமன் ஆகிய 2 குழந்தைகளும் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கடந்த 26-ந் தேதி மேல் சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சிறுமி அபிநிதி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். சிறுமியின் தம்பி புருஷோத்தமன் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் உயிரிழந்த சிறுமியின் உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அப்போது அபிநிதியின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது காண்போரைக் கண் கலங்கச் செய்தது.

திருப்பத்தூர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு ஒரு பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுமியின் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் டெங்கு தடுப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்