4 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின
சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 4 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும் செட்டிப்பட்டி அரசு பள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
தேவூர்:-
சரபங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 4 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும் செட்டிப்பட்டி அரசு பள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
வெள்ளப்பெருக்கு
ஏற்காடு பகுதியில் பெய்த கனமழை காரணமாக சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து, வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
தேவூர் அருகே உள்ள மோளாணி முனியப்பன் கோவிலை தண்ணீர் சூழ்ந்துள்ளது. குள்ளம்பட்டி பகுதியில் இருந்து வெள்ளூற்று பெருமாள் கோவில் செல்லும் சாலையில் ஆத்துபாலம் பகுதியில் உள்ள தரைப்பாலம், அம்மன் கோவில் பாலம், செட்டிப்பட்டி ஓங்காளியம்மன் கோவில் பகுதியில் உள்ள தரைப்பாலம், தைலாங்காடு தரைப்பாலம் உள்ளிட்ட 4 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கி காணப்படுகிறது.
பள்ளிக்கு விடுமுறை
4 தரைப்பாலங்களை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால், அதனை கடக்க முடியாமல் மாலங்காடு, கிழக்குஓலப்பாளையம், மேற்கு ஓலப்பாளையம், வெள்ளூற்று பெருமாள் கோவில், ஆரையான்காடு, செரக்காடு, சுக்கலான்காடு, வண்ணாங்காடு, கோட்டக்காடு, கந்தாயி காடு, மீனுவாயன்காடு, தைலாங்காடு, உள்ளிட்ட கிராம மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள்.
மேலும் செட்டிப்பட்டி சுடலை காளியம்மன் கோவிலில் உள்ள துர்க்கை அம்மன் உள்ளிட்ட பல்வேறு சாமி சிலைகளை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. செட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் நேற்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
அறிவிப்பு
இதேபோல் தேவூர் சரபங்கா ஆற்றின் தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக அந்த வழியாக பெரமாச்சிபாளையம், வெள்ளக்கல் தோட்டம், சென்றாயனூர், மயிலம்பட்டி, மேட்டுக்கடை, சோழக்கவுண்டனூர், மேட்டாங்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
மேலும் சங்ககிரி தாசில்தார் பானுமதி, தேவூர் வருவாய் ஆய்வாளர் சத்தியராஜ் தலைமையில் வருவாய் துறையினர் தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலங்கள் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதித்து அறிவிப்பு பேனர்கள் வைத்துள்ளனர்.