மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் 3 பேர் தர்ணா

பத்திரப்பதிவு செய்ய அதிகாரிகள் பணம் கேட்பதாக கூறி மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் 3 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-07-06 18:45 GMT

வளவனூர் அருகே உள்ள குமளம் கிராமத்தை சேர்ந்தவர்களான ஆளவந்தார்சாமி மகன்கள் ஜெயராமன், ஜெயகோபால் மற்றும் உறவினர் முத்துக்குமார் ஆகியோர் நேற்று மாலை விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் திடீரென அங்குள்ள நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கிருந்த அதிகாரிகள் நேரில் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஜெயராமன், ஜெயகோபால் ஆகியோர் கூறுகையில், எங்களது தந்தை ஆளவந்தார்சாமி பெயரில் வீட்டுமனை உள்ளது. அந்த வீட்டுமனையை அவரது வாரிசுகளான நாங்கள் 2 பேரும் பிரித்துக்கொள்ள முடிவு செய்து அதற்காக வளவனூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பதிவு செய்யும்படி முறையிட்டோம். எங்களுடைய ஆவணங்கள் அனைத்தையும் சரிபார்த்தபிறகு வில்லங்கம் உள்ளதாக கூறி, பத்திரப்பதிவு செய்ய முடியாது என்று அங்கிருந்த அதிகாரிகள் கூறிவிட்டனர். எங்கள் வீட்டுமனையை பதிவு செய்து எவ்வித வில்லங்கமும் இல்லை என்றும், எங்கள் தந்தைக்கான வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் மற்றும் பத்திரம் வில்லங்கம் இல்லை என்பதற்கான சான்றிதழ் அனைத்தும் பெற்று அதனை வழங்கி முறையாக பதிவு செய்திருந்தபோதிலும் அங்கிருந்த அதிகாரிகள், பத்திரப்பதிவு செய்வதற்கு லஞ்சம் கேட்டனர். நாங்கள் அதை கொடுக்காததால் பதிவு செய்ய முடியாது எனக்கூறி விட்டனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு மாவட்ட பதிவாளர் அலுவலக அதிகாரிகள், இதுகுறித்து விசாரிப்பதாக கூறியதன்பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த திடீர் போராட்டத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்