ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
நெல்லை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி தலைமையில் பல்வேறு இடங்களில் தொடர் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மேலப்பாளையம் வேடுவர் காலனி பகுதியில் காரில் ரேஷன் அரிசி கடத்தி வந்த வசந்தாபுரத்தை சேர்ந்த முருகன் (வயது 57), ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார் மற்றும் 16 மூட்டைகளில் இருந்த 640 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் களக்காடு -நாங்குநேரி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ஒரு காரில் ரேஷன் அரிசி கடத்தி வந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கார், 18 மூட்டைகளில் 720 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக நாங்குநேரி பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.