அரசு மருத்துவமனை ஊழியர் வீட்டில் 27 பவுன் நகை-பணம் கொள்ளை

அரசு மருத்துவமனை ஊழியர் வீட்டில் 27 பவுன் நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2022-09-29 21:42 GMT

திருவெறும்பூர்:

நகை-பணம் கொள்ளை

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் கைலாஷ் நகர் அண்ணா சாலை 3-வது தெருவை சேர்ந்தவர் வெண்ணிலா(வயது 58). இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை அவர் வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார்.

பின்னர் மதியம் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உள்ளிட்ட கதவுகளின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெண்ணிலா உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த ஒரு பீரோ திறந்தும், மற்றொரு பீரோ உடைக்கப்பட்டும் இருந்தது. இதையடுத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 27 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இது குறித்து திருச்சி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வெண்ணிலா தகவல் கொடுத்தார். அங்கிருந்து போலீசார் இது பற்றி திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அறிவழகன், இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் வந்த பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்