அவினாசி தாலுகா அலுவலகத்தில் ரேஷன் கார்டு கேட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

அவினாசி தாலுகா அலுவலகத்தில் ரேஷன் கார்டு கேட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

Update: 2021-05-07 20:11 GMT
அவினாசி
அவினாசி வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் ரேஷன்கார்டு கேட்டும், கார்டில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் ஆகியன கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதை வழங்காமல் காலதாமதம் செய்ததால் பொதுமக்கள்  அவினாசி தாலுகா அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் சாலைமறியல் செய்ய முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்த அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். 
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்து பல மாதங்களாகியும் கிடைக்கவில்லை. இதற்காக நாங்கள் எங்கள் தொழில், வேலைகளை விட்டுவிட்டு பலமுறை தாலுகா அலுவலகத்திற்கு வந்து கேட்டால் முறையான பதில் கூறாமல் காலதாமதம் செய்கின்றனர். இதனால் எங்களது பணிகள் பாதிக்கப்படுகிறது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.  இதையடுத்து தாலுகா அலுவலக அதிகாரிகளும், போலீசாரும் பொதுமக்களிடையே நீண்ட நேரம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி திங்கட்கிழமை முதல் வார்டு வாரியாக அனைவருக்கும் ரேஷன் கார்டு கிடைப்பதற்கு துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அவினாசியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்