‘கருணாநிதி, அன்பழகன் வழி நின்று தொடர்ந்து பாடுபடுவோம்’ பட திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு
‘கருணாநிதி, அன்பழகன் வழி நின்று தொடர்ந்து பாடுபடுவோம்’ என்று அன்பழகன் படத்திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.;
சென்னை,
தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தி.மு.க. தொண்டர்களால் பேராசிரியர் என்று அழைக்கப்பட்ட க.அன்பழகன் கடந்த 7-ந்தேதி காலமானார். அவரது மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் க.அன்பழகனின் உருவப்பட திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.
க.அன்பழகனின் உருவப்படத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அவர் தழுதழுத்த குரலில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
மறக்க முடியாது
நான் மிகுந்த கனத்த இதயத்துடன் உங்கள் முன்னாள் நிற்கிறேன். ஏற்கனவே கருணாநிதியை நாம் இழந்தபோது என்ன மனநிலைக்கு நான் ஆளாக்கப்பட்டேனோ? அதே மனநிலையில் தான், நான் இப்போதும் நிற்கிறேன். 98 வருடங்கள் க.அன்பழகன் வாழ்ந்து இருக்கிறார். 50 ஆண்டுகள் அவரை நான் பார்த்திருக்கிறேன்.
நான் பள்ளியில் படிக்கும் மாணவனாக இருக்கும்போது, கோபாலபுரத்தில் இளைஞர் தி.மு.க. எனும் மன்றத்தை தொடங்கினேன், ஒரு சலூன் கடையில் அலுவலக திறப்பு விழா நடந்தது. அதில் கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர். அப்போது அவரது முகம் புன்னகையுடன் இருந்தது. அந்த நிகழ்வு இப்போது என் நினைவுக்கு வருகிறது. அதை மறக்கவே முடியாது.
என் பெரியப்பா...
க.அன்பழகனை நான் எனது பெரியப்பாவாகவே ஏற்றுக்கொண்டேன். அப்பாவை விட பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவது சாதாரண விஷயம் அல்ல. மிகவும் சிரமம். ஆனால் நானோ பேராசிரியரால் அதிகம் புகழப்பட்டவன். அந்த கர்வம் என்னிடம் இருக்கிறது. கருணாநிதிக்கு பின்னால் தம்பி ஸ்டாலினே தலைவர் என முதன் முதலில் அறிவித்தவர் அவர் தான். இதை விட எனக்கு வாழ்நாள் பெருமை என்ன இருக்க முடியும்?.
அவர் உடல்நலம் குன்றி வீட்டில் ஓய்வுபெற்ற சமயத்தில் அடிக்கடி அவரை சந்தித்து உடல்நலம் விசாரிக்க நானும், துரைமுருகனும் செல்வோம். அவர் எங்களை பார்த்து சிரிப்பார். நாங்கள் வெளியே நடக்கும் அரசியல் நிலவரம், கட்சி நிலவரம், சட்டமன்ற நிலவரம், சுற்றுப்பயணம் நிலவரம் எல்லாவற்றையும் சொல்வோம். அதை கூர்மையாக கேட்டு, பின்னர் புறப்படுங்கள் என்பார், உனக்கு நிறைய வேலை இருக்கும். போய் அதை பாரு என்பது தான் அதில் சொல்வதில் அர்த்தம். மகனை போல நான் அவரை கவனித்துக்கொண்டேன் என்பார்கள். அது தவறு. மகனை போல அல்ல, பேராசிரியருக்கு நானும் மகன் தான் (தழுதழுத்த குரலில் பேசினார்).
இதை 1988-ம் ஆண்டு அன்பகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவரே சொல்லியிருக்கிறார். அந்த நிகழ்வில் கருணாநிதி, மு.க.ஸ்டாலினுக்கும், அன்பழகனுக்கும் போட்டியை உருவாக்குவதாக சொன்னார்கள். ஆனால் அன்பழகன் பேசும்போது, மு.க.ஸ்டாலின், கருணாநிதிக்கு மட்டும் மகன் அல்ல, எனக்கும் மகன் தான் என்று தெரிவித்தார்.
மிகப்பெரிய விழாவுக்கு...
கருணாநிதி மறைந்தபோது பேராசிரியர் இருக்கிறார் என்ற மனநிறைவுடன் நாம் இருந்தோம். ஆனால் அவரும் மறைந்துவிட்டார். ஒவ்வொரு முறை அவரை பார்த்துவிட்டு வரும்போது எல்லாம், பேராசிரியருக்கு 98 வயதாகிறது. இன்னும் 2 வருடம் போனால் செஞ்சுரி அடித்துவிடுவார். திராவிட இயக்க தலைவர்களிலே நூற்றாண்டு காணும் தலைவர் என்று மிகப்பெரிய விழா எடுத்து கொண்டாட வேண்டும் என்று அடிக்கடி பேசிக்கொள்வோம். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் நம்மையெல்லாம் விட்டு மறைந்துவிட்டார்.
கருணாநிதி மறைவுக்கு பிறகே அவரது உடலில் சோர்வு வந்துவிட்டதை கவனித்து தான் வந்தோம். பேச்சையும் குறைத்துக்கொண்டார். கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் இப்போதும் பேராசிரியரும் உயிரோடு நம்மிடையே இருந்திருப்பார். கருணாநிதி பிரிவை தாங்கமுடியாத காரணத்தால் தான் பேராசிரியர் நம்மையெல்லாம் விட்டு பிரிந்துவிட்டார் என்று நினைக்கிறேன். அதுதான் உண்மை.
அவரை இழந்து அனைவரும் வாடிக்கொண்டு இருக்கிறோம். அவரது உருவப்படத்தை திறந்து வைத்திருக்கிறேன். இந்த நேரத்தில், ‘தமிழ் இன உணர்வும், தமிழ் மொழிப்பற்றும், திராவிட இயக்க கொள்கையும் கொண்டவனாக நாம் தொடர்ந்து வாழ வேண்டும். பேராசிரியர் விட்டுச் சென்ற பணிகளை கருணாநிதி வழி நின்று, பேராசிரியர் வழிநின்று நாமும் பாடுபட்டு பணியாற்ற உறுதி எடுப்போம்’, என்று உறுதிமொழி ஏற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இனமான பேராசிரியர் பட்டம் ஏன்?
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-
அன்பழகன் ஏன் இனமான பேராசிரியர் என்று அழைக்கப்பட்டார் என்று தெரியுமா?. பெரியார் இந்த இயக்கத்தை தன்மானம், சுயமரியாதை இயக்கம் என்று சொன்னார். தன்மானம் என்று சொல்கிற போது தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். தன்மானத்தை விட பெரிது ஒன்று இருக்கிறது. அதற்கு பெயர் தான் இனமானம். தன்மானத்துக்கும் இனமானத்துக்கும் இடையே போட்டி வரும்போது தன்மானம் தோற்க வேண்டும். இனமானம் வெற்றி பெற வேண்டும். அதற்காக தான் உழைக்க வேண்டும் என்று பெரியார் எடுத்த பாடத்தை அன்பழகன் வாழ்ந்து காட்டினார்.
லட்சிய பயணத்தில் இந்த பந்தய குதிரை (மு.க.ஸ்டாலின்) வெல்லும். பந்தய குதிரைக்கு முன்னாள் ஜட்கா குதிரைகளால் ஒன்றும் செய்ய முடியாது. சில குதிரைகளை வந்து காட்டினார்கள். சில நாட்களுக்கு முன்னாள் அது பொய்கால் குதிரை என்பதை நாடே தெரிந்துக் கொண்டிருக்கிறது. எனவே நாளையும் நமதே, நாளை மறுநாளும் நமதே, நாடும் நமதே, ஆட்சியும் நமதே.
இவ்வாறு அவர் பேசினார்.
வைகோ
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசும்போது, ‘உரைவீச்சு என்றால் அன்பழகன் பேசுவது போன்று இருக்க வேண்டும். அன்பழகன் மறையவில்லை. உடலால், உயிரால் சாய்ந்து இருக்கிறார். பி.டி. தியாகராயர், நடேசனார், நாயர், பெரியார், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் எந்நாளும் திராவிட இயக்கத்தின் அழியாத பொற்சித்திரங்களாக திகழ்வார்கள். வாழையடி வாழையாக தி.மு.க.வை வழி நடத்த பொருத்தமான தலைவரை அவர்கள் விட்டு சென்றுள்ளனர். காலம் வெல்லும்’ என்றார்.
கே.எஸ்.அழகிரி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-
சிறுபான்மையின மக்கள் மத்தியில் தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகள் தேவையற்ற அச்சத்தை உருவாக்குகிறார்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, பா.ஜ.க.வின் மதசார்பு உணர்வுகளை கடுமையாக விமர்சித்து வருகிறது. வன்முறையில்லா போராட்டத்தை நடத்தி வருகிறது. ஆனாலும் குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என்று சொல்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொல்.திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது, ‘மு.க.ஸ்டாலின் ஆட்சி பீடத்தில் ஏறக் கூடாது. அதை எப்படியாவது தடுத்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள். பெரியார் காலத்தில் இருந்து எல்லா மாநிலங்களுக்கும் தமிழ்நாடு வழிகாட்டியாக இருக்கிறது. இனியும் வழிகாட்ட வேண்டும் என்றால் அது மு.க.ஸ்டாலின் தோளில் தான் இருக்கிறது. அது மிகப்பெரிய சுமை தான். நாங்கள் உங்களுக்கு உற்ற உறுதுணையாக இருப்போம்’ என்றார்.
பாலகிருஷ்ணன்-முத்தரசன்
விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர்,
திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் தலைவர் பொன்.குமார், இந்திய சமூகநீதி இயக்கத்தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கு.செல்லமுத்து, தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன், அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் நிறுவனத்தலைவர் பி.என்.அம்மாவாசி, ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன், மக்கள் விடுதலை கட்சியின் நிறுவனத்தலைவர் முருகவேல் ராஜன், இந்திய தேசிய கட்சியின் தலைவர் பஷீர்அகமது ஆகியோர் பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.பி.க்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், கனிமொழி, தயாநிதி மாறன், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ‘இந்து’ என்.ராம், தொழில் அதிபர்கள் பழனி ஜி.பெரியசாமி, நல்லி குப்புசாமி, க.அன்பழகனின் பேரன் வெற்றி அழகன் உள்பட அவரது குடும்பத்தினர், தி.மு.க. நிர்வாகிகள்-தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.