ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமாருக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் ரத்து - ஐகோர்ட்டு உத்தரவு

ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமாருக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-02-27 22:00 GMT
சென்னை, 

சந்தனக் கடத்தல் வீரப்பனை சுட்டுப்பிடித்த ஐ.பி.எஸ். அதிகாரியான விஜயகுமார் தலைமையிலான சிறப்பு அதிரடிப்படையினருக்கு தமிழக அரசு ரூ.54.29 கோடி மதிப்பில் 773 வீட்டுமனைகளை வழங்கியது. இதில், போலீஸ் அதிகாரி விஜயகுமாருக்கு சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்பில் வீட்டு மனை ஒதுக்கப்பட்டது. 

இந்த நிலத்தை அவர் கடந்த 2009-ம் ஆண்டு ரூ.1 கோடியே 99 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார். இதன்மூலம் கிடைத்த வருமானத்துக்கு அவர் முறையாக வரி செலுத்தவில்லை எனக்கூறி அவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து ஐகோர்ட்டில் விஜயகுமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டு பிடித்ததற்காக அவரை பாராட்டி மாநில அரசு இந்த நிலத்தை பரிசாக வழங்கியுள்ளது. 

ஆனால், இதுபோன்ற பரிசுகளுக்கு மத்திய அரசிடம் இருந்து உரிய அங்கீகாரம் பெறவில்லை என்பதால் வருமான வரியில் விலக்கு அளிக்கப்படவில்லை என்று வருமான வரித்துறை சார்பில் வாதிடப்பட்டது. ஆனால் போலீஸ் அதிகாரி விஜயகுமாரை பாராட்டி மத்திய அரசே விருது வழங்கியுள்ளது. 

எனவே வீரப்பனை பிடித்தமைக்காக போலீஸ் அதிகாரி விஜயகுமாருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பரிசுக்காக, அவருக்கு வருமான வரி விதிக்க முடியாது. வருமான வரிச்சட்டத்தில் அதற்கு விலக்கு உண்டு. எனவே, அவருக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்கிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்