4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் 5-வது நாளாக போராட்டம்

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் தொடர்ந்து 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2019-10-29 09:15 GMT
சென்னை,

காலம் சார்ந்த ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 25ம் தேதி துவங்கிய போராட்டமானது 5-வது நாளாக நீடித்து வருகிறது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நுழைவாயில் முன்பு 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 5-வது நாளான இன்று பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் என சுமார் 400-க்கும் மேற்பட்டோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அதில் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உடல்நிலை பாதிக்கப்பட்ட 11 மருத்துவர்களில் 2 பேரின் உடல்நிலை மோசமானதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள், போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பந்தலையும், நாற்காலிகளையும் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் போராட்டத்தை கைவிடாத மருத்துவர்கள், மரத்தடியில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புறநோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். உள்நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சைக்கு வருவோருக்கு மட்டும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 

நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் உள்ள 9 அரசு மருத்துவமனைகள், 62 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 365 மருத்துவர்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டிருப்பதால், பயிற்சி மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேவை ஏற்பட்டால் அறுவை சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைகள் அளிப்பதற்கு தயார் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்