தமிழகத்துக்கு அதிக முதலீட்டை கொண்டு வரவே முதல்-அமைச்சர் வெளிநாடு பயணம் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தமிழகத்துக்கு அதிக முதலீட்டை கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே முதல்-அமைச்சர் வெளிநாட்டுக்கு சென்று உள்ளார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Update: 2019-08-29 22:15 GMT
திருவொற்றியூர், 

சென்னை ராயபுரத்தில் உள்ள கிழக்கு மாதா கோவில் தெருவில் லாரிகள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அங்கு லாரிகள் நிறுத்தப்படுவதை தவிர்க்கும்விதமாக அந்த இடத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.30 லட்சத்தில் கூழாங்கல்லுடன் கூடிய நடைபயிற்சி பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு நடைபயிற்சி பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார். இதில் பகுதி செயலாளர் அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

கவர்னர் நல்ல முடிவு

இலங்கையில் தமிழர்கள் விவகாரத்தில் தி.மு.க. வேகமாக இருந்திருந்தால் லட்சக்கணக்கான இலங்கை தமிழர்கள் இறப்பதற்கான சூழல் உருவாகி இருக்காது. தமிழ் இனத்தை காக்க தி.மு.க. ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலையில் கவர்னர் நல்ல முடிவு எடுப்பார். 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அ.தி.மு.க.வின் நிலை.

அதிக முதலீட்டை கொண்டுவர...

அதிக முதலீடுகளை தமிழகத்துக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக திறந்த புத்தகம்போல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாட்டுக்கு செல்கிறார். ஆனால் மு.க.ஸ்டாலின், மேயராக இருக்கும்போது அரசிடம் அனுமதி வாங்காமல் பிரேசிலுக்கு சென்றது ஏன்?.

கராத்தே தியாகராஜன் வந்தால் அவரை அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்வது குறித்து கட்சி முடிவு செய்யும். சசிகலா, தினகரன் தவிர உலகில் யார் வந்தாலும் அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்வோம்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு கவர்னரின் செயலாளர் சென்றதில் தவறில்லை. அவருக்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்