தமிழக காவல்துறை சார்பில் 13 ஆயிரம் போலீசார் ரத்த தானம் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

தமிழக காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட ரத்த தான முகாமை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இந்த முகாமில் 13 ஆயிரம் போலீசார் ரத்த தானம் செய்தனர்.

Update: 2019-06-21 23:15 GMT
சென்னை,

தமிழக காவல்துறை சார்பில் மாபெரும் ரத்த தான முகாம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான போலீசார் ரத்த தானம் செய்தனர். இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது.

அதைத் தொடர்ந்து இந்த ஆண்டும் காவல்துறை சார்பில் மாபெரும் ரத்த தான முகாம் தமிழகம் முழுவதும் நேற்று நடத்தப்பட்டது. முகாம் தொடக்க நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரத்த தான முகாமை தொடங்கிவைத்தார். சென்னை உளவுப்பிரிவு துணை கமிஷனர் திருநாவுக்கரசு மற்றும் 2 பெண் போலீசார் உள்பட 7 பேர் முதலில் ரத்த தானம் கொடுத்தனர். அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

தமிழகம் முழுவதும் நடந்த 40 முகாம்களில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ரத்த தானம் செய்தனர். 89 ரத்த வங்கிகள் மூலமாக இந்த ரத்தம் சேகரிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. சென்னையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ரத்த தானம் செய்தனர்.

முன்னதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். முகாமில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்