18 மணி நேரம் வருமானவரி சோதனை: அமைச்சர் வீரமணியின் திருமண மண்டபம், உதவியாளர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின

அமைச்சர் வீரமணியின் திருமண மண்டபம், மேலாளர், உதவியாளர் வீட்டில் வருமான வரி துறையினர் 18 மணி நேரம் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச்சென்றனர்.

Update: 2019-02-22 22:15 GMT
வேலூர், 

அமைச்சர் வீரமணியின் திருமண மண்டபம், மேலாளர், உதவியாளர் வீட்டில் வருமான வரி துறையினர் 18 மணி நேரம் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச்சென்றனர்.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து நாட்டறம்பள்ளி செல்லும் மெயின் ரோட்டில் பார்த்தசாரதி தெருவில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது.

இங்கு நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு திடீரென வருமானவரி துறையினர் வந்து மண்டபத்தின் கதவுகளை மூடிவிட்டு சோதனை மேற்கொண்டனர்.

அதேபோல், ஜோலார்பேட்டையில் உள்ள திருமண மண்டப மேலாளர் சத்தியமூர்த்தி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அமைச்சரின் நேர்முக உதவியாளரும், ஜோலார்பேட்டை நகர அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.பி.சீனிவாசன் வீட்டிலும் வருமானவரி துறையினர் சோதனையில் நடத்தினர். டெல்லி, சென்னையில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 20 பேர் இந்த திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் இரவு 10 மணி வரை சத்தியமூர்த்தி வீட்டில் சோதனை நடத்தி, அங்கிருந்து முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன்பிறகு அமைச்சரின் திருமண மண்டபம், நேர்முக உதவியாளர் எஸ்.பி.சீனிவாசன் வீடு ஆகியவற்றில் தொடர்ந்து சோதனை நடத்தினர்.

நேற்று அதிகாலை 3 மணிக்கு சோதனையை முடித்துவிட்டு, வெளியே வந்த அதிகாரிகள் கைப்பற்றிய முக்கிய ஆவணங்களை தங்கள் கார்களில் கொண்டு சென்றனர். சுமார் 18 மணி நேரம் நடந்த இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்