அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.45 லட்சம் மோசடி செய்த பெண் போலீஸ் கைது தலைமறைவான கணவருக்கு வலைவீச்சு

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலீஸ்காரர் உள்பட 16 பேரிடம் ரூ.45 லட்சம் மோசடி செய்த பெண் போலீஸ் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-02-20 21:15 GMT
அம்பத்தூர்,

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலீஸ்காரர் உள்பட 16 பேரிடம் ரூ.45 லட்சம் மோசடி செய்த பெண் போலீஸ் கைது செய்யப்பட்டார். தலைமறைவான அவருடைய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை காவல் துறையில் பெண் போலீசாக பணியாற்றி வருபவர் அன்னிபெசன்ட் (வயது 39). இவர், கடந்த ஒரு வருடமாக தலைமைச் செயலக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இவருடைய கணவர் முருகன் (42). இவரும், தமிழக காவல் துறையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். கணவன்-மனைவி இருவரும் வில்லிவாக்கம் பாட்டை சாலையில் வசித்து வருகின்றனர்.

பெண் போலீஸ் அன்னிபெசன்ட், தங்கள் உறவினர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக டி.ஜி.பி. அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை போலீஸ் நிலைய போலீஸ்காரர் நாசர் (40) மற்றும் ஆழ்வார்பேட்டையை சேர்ந்த ரமேஷ் (40) ஆகியோர் புகார் அளித்தனர்.

இதுகுறித்து மேலும் பல்வேறு புகார்கள் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தன. இதையடுத்து அந்த புகார்கள் குறித்து விசாரிக்கும்படி ஐ.சி.எப். போலீஸ் நிலையத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது.

அதன்பேரில் ஐ.சி.எப். குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் போலீஸ் அன்னிபெசன்டை அழைத்து விசாரித்தனர்.

அதில், தலைமை செயலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் தனக்கு அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் நன்கு தெரியும். அவர்களின் சிபாரிசில் அரசு வேலை வாங்கித் தருவதாக போலீஸ்காரர் நாசர் உள்பட 16 பேரிடம் மொத்தம் ரூ.44 லட்சத்து 75 ஆயிரம், மோசடி செய்து இருப்பது உறுதியானது.

இதில் போலீஸ்காரர் நாசர் மற்றும் ரமேஷ் ஆகியோரிடம் மட்டும் ரூ.4 லட்சம் மோசடி செய்து உள்ளார்.

இதையடுத்து ஐ.சி.எப். போலீசார், ரூ.45 லட்சம் மோசடி வழக்கில் பெண் போலீஸ் அன்னிபெசன்டை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவான அவருடைய கணவரான போலீஸ்காரர் முருகனை தேடி வருகின்றனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில் பெண் போலீஸ் ஒருவரே கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்