மதுரையில் அடகுக்கடையை உடைத்து துணிகரம் 11¼ கிலோ தங்க நகைகள் கொள்ளை முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

மதுரையில் அடகுக்கடையை உடைத்து 11¼ கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Update: 2019-02-19 22:15 GMT
மதுரை,

மதுரையை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 61). இவர் உள்பட 4 பேர் நரிமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நகை அடகுக்கடை நடத்தி வருகின்றனர்.

கோபிநாத் நேற்று காலை கடையை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றார். பின்னர் மாலையில் கோபிநாத்தின் மகன் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

கொள்ளை

பின்னர் அவர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது, பாதுகாப்பு பெட்டகங்களில் வைத்திருந்த நகைகள் அனைத்தும் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து அவர் தனது தந்தைக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். கியாஸ் வெல்டிங் எந்திரம் மூலம் கடையின் கதவு, பாதுகாப்பு பெட்டகங்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. சுமார் 11¼ கிலோ தங்க நகைகள் கொள்ளை போயிருக்கலாம் என தெரியவருகிறது.

முகமூடி கொள்ளையர்கள்

கொள்ளை போன கடையில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லை. இவர்களது கடைக்கு எதிரே உள்ள கடையில் 2 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. ஆனால் அவற்றை கொள்ளையர்கள் வேறு திசையில் திருப்பி வைத்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.

மேலும் போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், முகமுடி அணிந்தபடி 2 பேர் மினிவேனில் வந்து, இந்த கொள்ளையை அறங்கேற்றி இருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து முக்கிய சாலைகள் மற்றும் நகரில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்