அரசு நிலத்துக்கு மோசடியாக ‘பட்டா’ பெறுவதை தடுக்க ‘தமிழ்நிலம்’ என்ற செயலியுடன் பத்திரப்பதிவு மென்பொருள் இணைப்பு ஐகோர்ட்டில், அரசு பதில் மனு தாக்கல்
அரசுக்கு சொந்தமான நிலங்களுக்கு மோசடியாக பட்டா பெற்று, அதை மற்றவர்களுக்கு பத்திரப்பதிவு செய்வதை தடுக்க வருவாய் துறையின் ‘தமிழ் நிலம்’ என்னும் செயலியுடன், பத்திரப்பதிவு மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
பத்திரப்பதிவுத் துறையில் ஊழலை குறைப்பது, வெளிப்படைத்தன்மையை பின்பற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பத்திரப்பதிவுத் துறை ஐ.ஜி.க்கு சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி. குமரகுருபரன் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது:-
பதிவுத்துறை சேவைகளை எளிமைப்படுத்தவும், ஆள்மாறாட்டத்தை தடுக்கவும், ஆவணங்களை மோசடியாக திருத்துவதை ஒழிக்கவும், ஊழலை குறைக்கவும், இடைத்தரகர்களை ஒழிக்கவும் ‘ஸ்டார் 2.0’ என்ற மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மென்பொருள் மூலம் ஆன்லைனின் பத்திரப்பதிவு செய்யும் முறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த புதிய வசதியை பயன்படுத்தி, பொதுமக்களே தங்களது சொத்து களின் ஆவணங்களை தயார் செய்து பதிவு செய்யமுடியும். அதனடிப்படையில் கடந்த 23-ந் தேதி வரை 20 லட்சத்து 19 ஆயிரத்து 403 பத்திரங்கள் பொதுமக்களே மென்பொருள் மூலம் தயாரித்து பதிவு செய்துள்ளனர்.
பத்திர எழுத்தர்கள் மூலம் 6 லட்சத்து 10 ஆயிரத்து 226 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் உள்ள இந்த வசதியை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த தமிழக அரசுக்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆவணங்களை பதிவு செய்தவுடன், அவற்றை விண்ணப்பதாரருக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிறர் நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து விற்பனை செய்வதை தடுப்பதற்காக, விற்பவரின் கைரேகையை சரிபார்க்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆதாருக்காக பெறப்பட்ட ‘பயோமெட்ரிக்’ விவரங்களை பத்திரப்பதிவுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக 2 ஆயிரத்து 725 கருவிகள் கொள்முதல் செய்வதற்கு ரூ.2.02 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
அரசுக்கு சொந்தமான நிலங்களை மற்றவர்கள் பத்திரப்பதிவு செய்வதை தடுக்க வருவாய் துறையின் ‘தமிழ் நிலம்’ என்னும் செயலி, பத்திரப்பதிவுக்கான மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு நிலங்களுக்கு பட்டா பெற்று மோசடி செய்வது தடுக்கப்படுகிறது.
பத்திரப்பதிவுக்கான கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்த வசதியாக வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.